பரபர அரசியல் சூழலில் அக்- 6-ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு
திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை, செப்-19
இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடக்கும். இப்போது முதல் முறையாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
அவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர். பொதுக்குழு கூட்ட அரங்கம் அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்தனர்.
திமுக தலைவராக ஸ்டாலின் முழு அதிகாரத்தில் உள்ள சூழலில், பொதுக்குழு கூடுகிறது. ஆகையால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், அதில் அவரும் பங்கேற்கவுள்ளார்.