43- வது சென்னை புத்தக கண்காட்சி: ஜன.9-ல் முதல்வர் பழனிசாமி துவங்கி வைக்கிறார், நிறைவு விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்பு

சென்னை, ஜனவரி-07

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.

43-வது சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக பபாசி தலைவர் ஆர்.எஸ் சண்முகம், செயலாளர் எஸ் .கே முருகன்,பொருளாளர் கோமதிநாயகம் சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. 750 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும். தமிழக முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து ஏராளமான வாசகர்கள் வருடந்தோறும் வருகை தருகின்றனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9 தேதி மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 43வது சென்னை புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து சிறந்த பதிப்பாளர் மற்றும் எழுத்தாளருக்கு விருது வழங்குகிறார்.

நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயக்குமார் அன்பழகன், பாண்டியராஜன், மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலை உலகினர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஜனவரி 21 அன்று மாலை 6 மணிக்கு புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.

இந்த புத்தக கண்காட்சியில், சிறப்பு அம்சமாக ஒரிசாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் திருவள்ளுவரின் உருவத்தை ஜனவரி 8- ம் தேதி மணல் சிற்பமாக வடிவமைக்கிறார்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியின் சிறப்பையும் பாரம்பரியம் மற்றும் திருக்குறளின் பெருமையையும் புத்தக கண்காட்சிக்கு வரும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கீழடி -ஈரடி என்ற தலைப்பில் 3 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்டமான அரங்கம் தமிழக தொல்லியல்துறை ஒத்துழைப்போடு அமைய உள்ளது.

எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் இணைக்கும் “எழுத்தாளர் முற்றும்” என்ற நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சுமார் 25 எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளனர்.

புத்தகக் கண்காட்சியின் பொதுமக்கள் வாங்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். சென்னையை சுற்றி உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நுழைவுக் கட்டணம் இன்றி இப்புத்தக காட்சிக்கு வரும் வகையில் அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு பபாசியின் சார்பில் இலவச அனுமதி சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகக் காட்சியின் நுழைவுக்கட்டணம் ரூ.10. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பேச்சு போட்டி ஓவியப் போட்டி வினாடி- வினா போன்றவை பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வெற்றி பெறுவதற்கு சான்றிதழ் புத்தகங்கள் வழங்கப்படும்.

இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம் சமூக நலன் மற்றும் புத்தகம் தொடர்பான ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு அமைக்கப்படும்.  மாற்றுத்திறனாளிகள் எளிதில் பார்வையிட சக்கர நாற்காலிகள் இப்புத்தகக் கண்காட்சி வளாகத்தில் ஏடிஎம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் புத்தகம் வாங்கும் வசதி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த ஆண்டு, புத்தகக் கண்காட்சிக்கு 20 லட்சம் வாசகர்கள் எதிர்பார்க்கிறோம். ரூ.20 கோடி ரூபாயில் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் மெட்ரோ பாஸ் வைத்திருந்தால் அனுமதி இலவசம், முந்தைய ஆண்டை விட கழிப்பறை வசதி, குடிநீர் வசதி அதி‌க அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், மருத்துவ சேவை, இலவச இரத்த பரிசோதனை, தியணைப்பு வாகனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைனில் புத்தகங்கள் வாசிப்பால், அச்சக பதிப்பு புத்தக விற்பனை மிக குறைந்து வருகிறது. தலைவர்களின் புத்தகங்கள், சரித்திர நாவல் புத்தகங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. புத்தகக் கண்காட்சி அரங்கு மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *