குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

சென்னை, ஜனவரி-06

குரூப் -4 தேர்வில் முறைகேடு தொடர்பான புகாருக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

குரூப் 4 தேர்வின்போது, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, இதர மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்ததை டிஎன்பிஎஸ்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது என்றும், இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட 57 பேரில் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 40 விண்ணப்பதாரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இந்த விண்ணப்பதாரர்கள், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர் என்றும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.

இம்மையங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் 40 பேர், தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள்ளும், 35 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளும் உள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி உறுதியளித்துள்ளது.

இவ்விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *