ப.சிதம்பரத்துக்கு 5 நாட்கள் சி.பி.ஐ காவல்

புதுடெல்லி ஆகஸ்ட் 22

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அமைதியாக இருப்பது அவரது உரிமை. ஆனால் முக்கியமான கேள்விகளை தவிர்ப்பது ஒத்துழையாமைதான். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே ஐ என் எக்ஸ் மீடியா பற்றிய சதியின் உண்மைகள் வெளிவரும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, சிதம்பரம் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினார். சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.
ப.சிதம்பரத்துக்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என சி.பி.ஐ.க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *