வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சு எதைக்குறிக்கிறது?

கோவில்களுக்குச் செல்லும் இந்துக்களின் மனம் புண்படும்படி கேலி செய்யக்கூடாது. கோவிலுக்கு போக விருப்பம் இல்லாதவர்கள் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம். ஆனால், கோவிலுக்கு போகிறவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை, செப்-18

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ம.தி.மு.க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ பேசியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனி கோவிலுக்கு, திருப்பதிக்கு, காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரை தரிசிக்க என பக்தர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மசூதிக்கு போகிறவர்களை வாழ்த்துவது போல- ஜெபக்கூடங்களுக்கு செல்வபவர்களை வாழ்த்துவது போல கோவில்களுக்குப் போகிறவர்களை வாழ்த்தலாம். கேள்விகள் வரும் வீரமணி வேண்டுமானால் என்னுடன் இதற்கு உடன்படாமல் போகலாம். அப்படியானால் பெரியாரிடம் இருந்து விலகிவிட்டாயா? என்கிற கேள்வி வரலாம்.. வரும். 1940களில் பேசியதை அண்ணா 1960களில் பேசவில்லையே.. 50களில் பேசியதை 60 களில் பேசவில்லையே.. அது போர் தந்திரம். அதிகாரம் சனாதான எதிரிகள் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதற்கான வியூகம் இது.

99% இந்துக்கள் இன்றும் கோவில்களுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கிற 99% பேர் கோவில்களுக்கு போகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை உங்களால்.. பிறகு எதற்கு கோவிலுக்குப் போகிறவர்களை கிண்டல் செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் பாட்டனார் கட்டிய கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அது மக்களின் விருப்பம்.. அதைத்தான் செய்கிறோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும். மாற்றத்தை ஆதரிப்பதும், கோவில்களுக்கு சென்று வழிபடுவோரின் உணர்வுகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வைகோ பேசியது பலரின் புருவங்களை உயர்த்த வைத்தது.

திராவிட இயக்கங்களை இந்துக்களுக்கு எதிரானவையாக காட்ட சங் பரிவாரங்கள் முயற்சி செய்வதால், இப்படி பேசும்படி வைகோ நிர்பந்தம் செய்யப்படுகிறார் என்ற கருத்தும் இருக்கிறது. ஏற்கெனவே, பாஜகவினர் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று கூறியதற்கு ஸ்டாலின் இதே தொனியில் பதில் அளித்திருக்கிறார். திமுக என்றும் இந்துக்களுக்கு எதிரானது அல்ல. கட்சியில் இருக்கும் 90 சதவீதம் உறுப்பினர்கள் இந்துக்கள்தான். இப்போதும் தனது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, திமுகவை இந்து விரோத கட்சியாக முத்திரை குத்த முயற்சி நடக்கிறது என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *