வைகுண்ட ஏகாதசி விழா: திருவரங்கம் அரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி. ஜனவரி.6

திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில்  வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தார்கள் தரிசனம் செய்தனர்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான  திருச்சி, திருவரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்றதைத்  தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது.


முன்னதாக அதிகாலை, 3.30 மணிக்கு  உற்சவரான நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரை பிரதட்சணம் வழியாக, சொர்க்கவாசலை வந்தடைந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கம்  முழங்க, சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார்.


பின்னர் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகையில் எழுந்தருளிய நம்பெருமாளை  பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை இருந்தார். மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில்,திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களிலும்  வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *