ஆளும்கட்சி எழுதி கொடுத்ததை ஆளுநர் வாசிக்கிறார், இந்த உரையால் ஒரு தாக்கமும் ஏற்படாது-ஸ்டாலின்

சென்னை, ஜனவரி-06

ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில், மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  ஆளுநர் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். தமிழகத்தின் கடன் தொகை 4 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, இதே ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.

இந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. அதிமுக ஆதரவால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு நிர்வாகம் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆளும்கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டிருக்கிறது.

நேற்று புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கர், அப்ப்குதி எம்எல்ஏக்கள் ஆகியோர், அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவரை “நீ திமுகவை வெற்றி பெற வைத்து விட்டாய். நாங்கள் சொன்னது போல செயல்படவில்லை” என பேசி அவரை இழிவுபடுத்தியிருக்கின்றனர்.

புதிதாக ஞானோதயம் பிறந்தது போல நீட் தேர்வை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியிருக்கிறது தமிழக அரசு. இதே சட்டப்பேரவையில் நீட் தேர்வில் விலக்கு கோரி 2 மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோமே, அவை என்ன ஆனது? 2 ஆண்டுகளாக அதைப்பற்றி எதுவும் கவலைப்படவில்லை. இப்போது திடீரென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பெரிய கபட நாடகம். அனிதா உள்ளிட்ட 7 பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்திருக்கின்றனர்.

இவற்றை கண்டிக்கும் விதமாக, ஆளும்கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு வளர்பிறை எனவும், திமுகவுக்கு தேய்பிறை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “கடந்தாண்டு மக்களவையில் திமுகவின் பலம் என்னவென்று உங்களுக்கு தெரியும். இப்போது 24 எம்.பிக்கள் இருக்கின்றனர். சட்டப்பேரவையில் 89 ஆக இருந்த திமுக பலம் இப்போது 100 ஆக அதிகரித்துள்ளது.

2011 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் 1,007 பேர் இருந்தனர். இப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் 2,100 பேர் இருக்கின்றனர். மாவட்ட கவுன்சிலர்கள் 30 பேர் முந்தைய தேர்தலில் இருந்தனர். இப்போது 243 பேர் இருக்கின்றனர். இது தேய்பிறையா? வளர்பிறையா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அபூர்வமான கருத்தை சொன்ன அமைச்சருக்கு இந்த கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “அவர் எடப்பாடி பழனிசாமியின் பள்ளிக்கூடத்தில் தேர்தல் விதிமுறைகளை படித்திருப்பார் என நினைக்கிறேன். அந்த பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு நடந்திருக்கிறார்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *