தமிழர்கள் நன்றி மறந்தவர்களா?.. பொன்னாருக்கு சீமான் கண்டனம்

தமிழர்களை நன்றி மறந்தவர்கள் எனக்கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-18

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று இந்த நாட்டின் பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டாடி இருக்க வேண்டும். அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்களே எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக, இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது;-

“இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழ் மொழியிலிருந்து அறியலாம் என்று பிரதமர் மோடி கூறியதை வரவேற்றிருக்கிறேன். அதனைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியும் பேசியிருக்கிறேன். ஆனால், அத்தகைய மொழிக்குப் பிரதமர் மோடி செய்த நன்மையென்ன? என்பதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. சின்னஞ்சிறு நாடு சிங்கப்பூர் தமிழை ஆட்சிமொழியாக்கி அங்கீகரிக்கிறது. உலகெங்கும் 130 நாடுகளில் பரவிவாழ்கிற தமிழர்களின் தாய்மொழி, உலகின் முதல் மொழி தமிழ். அத்தகைய மொழிக்கு இந்நாடு கொடுத்த மதிப்பென்ன? பெருமையென்ன? சிறிய நாடுகளில்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய நாடான இந்திய ஒன்றியத்தில் 22 மொழிகளையும் ஏன் ஆட்சி மொழியாக்கக் கூடாது? எனக் கேட்கிறோம். அதனைச் செய்யாது இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும்? தமிழுக்கு உரிய அங்கீகாரத்தையும், மதிப்பையும் தராததின் விளைவாகத்தான் பிரதமர் மோடியை விமர்சிக்கிறோம். அதனால், எங்களை நன்றி மறந்தவர்கள் என அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *