மழைநீர் சேகரித்தவர்களுக்கு ”நீர் பாதுகாவலர்” சான்றிதழ்-ஆணையர் பிரகாஷ்

சென்னை, ஜனவரி-04

சென்னையில் பயன்பாடற்று இருந்த 330 சமுதாய கிணறுகள் தூர்வாரப்பட்டு முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், தனியார்  கட்டடங்கள்  மற்றும்  தொழிற்சாலைகளில்  அமைக்கப்பட்டு  வரும்  மழைநீர்  சேகரிப்பு கட்டமைப்புகள்  குறித்து  பெருநகர  சென்னை  மாநகராட்சி  மற்றும்  சென்னை  பெருநகர்  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆணையர் பிரகாஷ் மற்றும்  சென்னை  பெருநகர  குடிநீர்   வழங்கல்   மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: மாநகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில்  நிலத்தடி  நீர்  மட்டத்தை உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு     முதலமைச்சரின்  ஆலோசனைகளின்படி,  மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,  ஊரக  வளர்ச்சி  மற்றும்  சிறப்புத்  திட்டங்கள்  செயலாக்கத்  துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பெருநகர  சென்னை  மாநகராட்சி  மற்றும்  சென்னை  பெருநகர  குடிநீர்  வழங்கல்  மற்றும் கழிவுநீரகற்று  வாரிய  அலுவலர்களை கொண்டு   சிறப்பு குழுக்கள் அமைத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்படி,  பெருநகர  சென்னை  மாநகராட்சியில்  இதுநாள்வரை  3,15,276  கட்டடங்களில் மழைநீர்  சேகரிப்பு  கட்டமைப்பு  உள்ளனவா  என  ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு,  இதில்  2,47,421 கட்டடங்களில்  ஏற்கனவே  மழைநீர்  சேகரிப்பு  கட்டமைப்புகள்  நல்ல  நிலையில்  உள்ளன. 

மேலும், 21,582   கட்டடங்களில்   உள்ள   மழைநீர்   சேகரிப்பு   கட்டமைப்புகளில்   சிறு   பராமரிப்பு   பணிகள் மேற்கொள்ளவும்,   இதில்   25,394  கட்டடங்களில்  மழைநீர்  சேகரிப்பு  கட்டமைப்புகள்   புதியதாக அமைக்கும்  பணிளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.  குறிப்பாக இவற்றில் 41,694  மழைநீர்  சேகரிப்பு கட்டமைப்புகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்  சென்னை  பெருநகர  குடிநீர்  வழங்கல்  மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து பயன்பாடற்று இருந்த 330 சமுதாய கிணறுகளை கண்டறிந்து தூர்வாரி புனரமைத்துள்ளது. மேலும், இக்கிணறுகளில் அருகிலுள்ள வணிக கட்டடங்கள், தனியார் கட்டடங்களிலிருந்து மழைநீர் இணைப்பு வழங்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரித்து நிலத்தடி நீர்   மட்டத்தை   உயர்த்த   நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இப்பணிகள்   முழுவதுமாக முடிவுற்று   நல்ல   நிலையில்   பயன்பாட்டில்   உள்ளன.   இதே   போன்று   பெருநகர   சென்னை மாநகராட்சியின்    அனைத்து    கட்டடங்கள்,    சென்னை    பெருநகர   குடிநீர்    வழங்கல்    மற்றும் கழிவுநீரகற்று    வாரிய    அலுவலக    கட்டடங்கள்    அனைத்திலும்    100%   மழைநீர்    சேகரிப்பு கட்டமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய  நடவடிக்கை  காரணமாக  சென்னையில்  குறைந்த  அளவே  பருவமழை  பெய்த நிலையில்  நிலத்தடி  நீர்மட்டம்  கடந்த  காலங்களைவிட  வெகுவாக  உயர்ந்துள்ளது.  இப்பணிகளை சிறப்பாக      மேற்கொண்ட      அலுவலர்கள்,      குடியிருப்பு      நலச்சங்கங்கள்      மற்றும்      வீட்டு உரிமையாளர்களுக்கு வருகின்ற 26.01.2020 குடியரசு  தினவிழாவில்  “நீர்  பாதுகாவலர்”  என்ற பாராட்டு   சான்றிதழ்   வழங்கப்படும்   என   ஆணையர்   பிரகாஷ்,   தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *