ஆளுநர் சொன்னதால போராட்டம் ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் விளக்கத்தை ஏற்று நாளை மறுநாள் திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-18

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

தமிழ்நாட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் இந்தி திணிக்கப்படமாட்டாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார். மேலும இந்தி பற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என ஆளுநர் விளக்கம் தந்தார். ஆகையால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரின் விளக்கத்தை ஏற்று நாளை மறுநாள் திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன் தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அமித்ஷாவும் விளக்கம் தந்துள்ளார். இந்தி திணிப்பை திமுக எப்போதும் எதிர்க்கும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே போராடும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *