இ-சிகரெட்டுகளுக்குத் தடை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இ-சிகரெட்டுலள் பலமடங்கு விற்பனையாகி வரும் நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-18

தற்போது இந்திய நிறுவனங்கள் எதுவும் இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், அதே நேரத்தில் 150 சுவைகளில் சுமார் 400 பிராண்டுகளில் விற்பனையாகி வருகின்றன. அதிலும் இளைஞர்கள் இ- சிகரெட்டுகளின் மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வரும் இ- சிகரெட்டுகள் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இ-சிகரெட்டுகளைப் பொறுத்தவரை பென் டிரைவ், பேனா உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விற்பனையாகி வருகின்றன. இதில் உள்ள பட்டனை அழுத்தும்போது அதில் உள்ள திரவம் ஆவியாக மாறி சிகரெட்டுகளை புகைப்பது போன்று உணர்வு கிடைக்கும். மற்ற சிகரெட்டுகளைப் போல இதில் அதிகளவு புகை வெளியேறுவதில்லை. ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நிலையில், இ- சிகரெட்டுகளுக்கான உற்பத்தி, ஏற்றுமதி & இறக்குமதி, சேமித்து வைத்திருப்பது, விளம்பரம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாட்டில் இ- சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலுக்கு வரும். குளிர்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். தடையை மீறி இ – சிகரெட்டுகளை தயாரித்தலோ, விற்பனை செய்தாலோ தனிநபர் என்றால் 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்யும் பட்சத்தில் 3 வருடம் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இ – சிகரெட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்த நிலையில், மத்திய அமைச்சரவை இதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *