அரசியலில் ஜெயிக்க அதிர்ஷ்டம் வேண்டும்-டி.ராஜேந்தர்

சென்னை, ஜனவரி-03

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் தேர்தலில் வெளியான முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு என்றும் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் சினிமா அழிவுக்கு தமிழ் ராக்கர்சை மட்டுமே குறை சொல்வது தவறு. தமிழ் ராக்கர்ஸ் அழித்துவிடுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள். தமிழ் சினிமாவின் அடிப்படை பிரச்சனைகளை களைந்தாலே போதும்.

டிக்கெட் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாப்கார்ன் விலையையும், பார்க்கிங் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்திக்க உள்ளோம். தமிழ் சினிமாவில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. ஆனால் எங்கள் சங்கம் சிறப்பாக செயல்படும்.

இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு தங்களுக்கு விருப்பமானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு. அதனால்தான் நான் ஏற்கவில்லை பங்கு. இந்தத் தேர்தல் முடிவு என்னையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் எங்கள் கட்சி தொண்டர்களும் நிற்க விரும்பினார்கள். நான் ஓட்டு கேட்டு வரமுடியாது என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு பணம் கொடுக்காமலேயே மூன்றாமிடம் வந்திருக்கிறார். ரஜினி, கமலே யோசிக்கும் போது நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலில் நேரம் மட்டும் தான் ஜெயிக்கும். அதிர்ஷ்டம் கண்டிப்பாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *