நெருக்கடி நிலைபோல CAA கொண்டு வரப்பட்டுள்ளது-வைகோ

சென்னை, ஜனவரி-01

நெருக்கடி நிலை போல ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கே தெரியாமல் குடியுரிமை சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அவசரமாக அமல்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை வைகோ தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தொடர்ந்து 25 ஆண்டுகளாக என்னை மதித்து புத்தாண்டு முதல் நாளில் விடுமுறையை குடும்பத்தினரோடு கழிக்காமல் என்னை சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், இலங்கை தமிழர்கள், அகதிகளாக உள்ள மார்த்தாண்டம், பெரியக்காவிளைக்கு சென்ற செய்தியாளர்கள் மீது பிணையில் வரமுடியாத வழக்கு பதிவு செய்துள்ள அரசின் பாசிச போக்கு கண்டனத்துக்குரியது.

மார்கழியில் பெண்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை பாடி பஜனை செய்வதும், வாசலில் மாக்கோலம் இடுவதும் மரபு. ஆனால், தற்போது, போர்க்கோலம் போட்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். காவல் துறையினர் அடக்கு முறையை கையாள்வது கண்டனத்துக்குரியது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியது போல் தற்போது ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு தெரியாமலேயே CAA கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவசியம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? எதற்காக இந்த திடீர் தாக்குதலாக கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்த கொள்கையிலும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று கூறிவருகிறார். ஜனசங்க காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பின்பற்றி வரும் பா.ஜ.க. இந்துத்துவாவை செயல்படுத்திகிறார்கள். பெரும்பான்மை இருப்பதால் காஷ்மீரை துண்டு துண்டாக்கியது போல் எதையும் செய்யலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு மத்திய அரசு விருந்து கொடுத்தது வேதனை அளிக்கிறது. ஆனால், தமிழர்களையும், தமிழக மீனவர்களையும், துன்புறுத்தி கைது செய்யும் இலங்கை அரசை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொடர்ந்துமத்திய அரசு தமிழக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இவ்வாறு வைகோ பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *