இந்தியை திணிக்க சொன்னேனா?.. அந்தர் பல்டியடித்த அமித்ஷா

இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தாம் தெரிவித்த கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி, செப்-18

இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தேசிய தலைவருமான அமித்ஷா வாழ்த்துச் செய்தி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறியிருந்தார். இது, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் இந்த திணிப்பு பேச்சுக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தியை தாய்மொழியாக கொள்ளாத பல்வேறு மாநிலங்களிலும் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் அமித்ஷா இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும், நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பேசப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. தங்களது தாய் மொழிக்கு அடுத்தபடியாக இந்தி மொழியை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறியிருந்தேன். தனிப்பட்ட முறையில் நான் கூட இந்தியை தாய்மொழியாக பேசாத மாநிலமான குஜராத்தில் இருந்து தான் வந்துள்ளேன். ஆனால் எனது பேச்சை வைத்து சிலர் அரசியல் செய்ய விரும்பினால், செய்து கொள்ளட்டும். அது அவர்கள் விருப்பம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தங்களது உள்ளூர் மொழிகள் மக்களால் மறக்கப்பட்டு ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாகவும், பொது மொழியாகவும் மாறிவிட்டது. அதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், இரண்டாவது மொழியாக இந்தியையும் கற்றுக் கொள்ளலாம் என்று நான் தெரிவித்திருந்தேன். இவ்வாறு அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *