இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோல்வி.. அமித்ஷாவின் பேச்சுக்கு பின்னால் இருக்கும் அதிர வைக்கும் பின்னணி..

பல கட்சி ஜனநாயகம் தோல்வியடைந்து விட்டதாக, மக்கள் இப்போது நினைக்கத் தொடங்கி விட்டார்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான, அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி, செப்-18

இந்தி தினத்தை முன்னிட்டு, அது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, இந்த நாட்டின் தேசிய மொழியாகும் தகுதி இந்திக்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்தி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, தற்போது பல கட்சி ஆட்சி முறை தோல்வியடைந்தது என்று அமித் ஷா தெரிவித்துள்ளது மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இது தொடர்பாக அமித் ஷா கூறியிருப்பதாவது ;-

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மக்கள் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை என்பது தோல்வி அடைந்து விட்டது என்று அவர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற நடைமுறை வைத்துக் கொண்டு நமது குறிக்கோள்களை எட்ட முடியாது என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் ஆட்சி காலத்தின்போது, அந்த அரசு திக்கு திசை இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு கொள்கை கோட்பாடும், அவர்களுக்கு கிடையாது. தினந்தோறும் ஏதாவது ஒரு ஊழல் தொடர்பான செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின்போது, இந்திய நாட்டின் எல்லைகள் பாதுகாப்பில்லாமல் இருந்தன. நமது நாட்டின் ராணுவ வீரர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். ஏதாவது ஒரு பிரச்சினைக்காக பொதுமக்கள் தினந்தோறும் சாலைக்கு வந்து போராடும் நிலைமையில் இருந்தது இந்த நாடு. எப்போதுமே அரசியல் ஆதாயத்திற்காகதான் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுகளை எடுத்தது. ஆனால், தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை தவிர்த்து விட்டு மக்களுக்கு எது தேவையோ அதை மட்டும் செய்கிறது.

இந்த நாட்டில் சில அரசுகள், பெரிய முடிவு ஒன்றை எடுப்பதற்கு 30 ஆண்டு காலம் வரை செலவழித்தனர். ஆனால் எங்கள் அரசு, வெறும் ஐந்து ஆண்டுகளில் மிக முக்கியமான 50 முடிவுகளை எடுத்துள்ளது. இதில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, விமானப்படை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கும். இது போல குறுகிய காலத்தில் இத்தனை முக்கியமான முடிவுகளை எடுத்த எந்த அரசையும் இந்தியா பார்த்தது கிடையாது.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பல கட்சி ஜனநாயக நடைமுறை மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக அமித் ஷா கூறியுள்ளதன் மூலம், சீனா போல ஒற்றைக் கட்சி ஜனநாயக நடைமுறையை கொண்டு வருவதற்கு அல்லது அமெரிக்கா போல இரட்டை கட்சி ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு அமித் ஷா விரும்புகிறாரா என்று சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *