2019 தமிழகம்: முக்கிய நிகழ்வுகளின் ஓர் தொகுப்பு

சென்னை, டிசம்பர்-31

பிளாஸ்டிக்கிற்கு தடை:

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. 2018-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் தூக்கி எறியும் நெகிழிக்கு 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்தது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்:

ஜனவரி 27-ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதுதவிர, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூரில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை காணொலி காட்சி மூலமாக அவர் தொடக்கி வைத்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்:

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதின் பேரில் மார்ச் 6-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட அனுமதி அளித்து அதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்தது. தமிழகமே இந்த விவாகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக தேர்தல் கூட்டணி:

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுகவுக்கு ஜென்ம விரோதிகளாக கருதப்படும் பா.ஜ.க. பா.ம.க. தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இனிமேல் பா.ஜ.க.வுடன் என் வாழ்நாள் முழுவதும் கூட்டணி சேரமாட்டேன் என ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பை மட்டுமே சம்பாதிருந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் அமைந்த கூட்டணி ஜெயலலிதாவின் வாக்குறுதியை உடைத்தது. எப்போதும், அதிமுகவை விமர்சித்த கட்சியான பா.ம.க.வுடனும் கைக்கோர்த்தது. அதுமட்டுமில்லாமல், ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்த விஜயகாந்தின் தேமுதிமுகவையும் அதிமுக சேர்த்துக்கொண்டது. முற்றிலும் எதிர்மறையான கூட்டணியை அதிமுக அந்த தேர்தலில் அமைத்தது.

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்:

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. மே-23 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மேலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றிபெற்றது. அதிமுக மக்களவை தொகுதியில் தேனியில் மட்டும் வெற்றிபெற்றது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை தக்க வைத்தது.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம்:

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர் பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு, 2019 ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி தந்த நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தந்தார். அத்தி வரதர் தினமும் விதவிதமான பட்டு சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்போரை பிரமிக்கச் செய்தார். அதோடு அவருக்கென பல்வேறு வகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்படும் அத்திவரதரை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குவியத் தொடங்கினர். இதனால் காஞ்சிபுரம் நகரம் ஸ்தம்பித்தது. சுமார் 1 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கீழடி அகழாய்வு:

தமிழகத்தில் மிக விரிவான அளவில், ஏறக்குறைய 100 கி.மீ. சுற்றளவில் விரிந்து பரந்த வாழ்விடப் பகுதியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட கீழடி ஆய்வில், தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவந்தன. ‘கீழடி குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற வாழ்விடப் பகுதியாக விளங்கியிருக்கிறது. மத்திய தொல்லியல் துறை கைவிட்ட பிறகு மாநில அரசு கையில் எடுத்து வென்று காட்டிய விஷயம் இது என்பது முக்கியமானது. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்தும் பார்க்க வேண்டும் என்ற குரல் வலுப்பட கீழடி மேலும் ஆதாரமானது.   

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம்:

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றார். 13 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முதல்வர் பழனிசாமிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்பு:

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பணியை முடித்து விட்டு இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமணத்தையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென சரிந்து விழுந்ததில் தடுமாறிய சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்

இந்த நிகழ்வு பெரும்பாலான மக்கள் மத்திய மிகுந்த சோகத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினரும், திரையுலக பிரபலங்களும் இனிமேல் பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்தனர். அந்த பெண் உயிரிழந்தது தொடர்பாக சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழகத்தில் சாலையோரங்களில், சட்டவிரோதமாக பேனர் வைப்பது குறைந்துள்ளது.

ஆழ்துளை கிணற்றில் சிக்கி சிறுவன் சுஜித் உயிரிழப்பு:

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பயன்பாடற்று இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்த துயரமான நிகழ்வு நடந்தேறியது. நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவும், பேரிடர் மீட்புப் படையினரின் துணையோடும் சிறுவனை மீட்க அதீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் மட்டுமன்றி தேசம் முழுக்க சிறுவன் சுஜித்துக்காக சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு சுஜித்தின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி உலக அரங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி கூட சுஜித் மீண்டு வரவேண்டும் என ட்விட் செய்திருந்தார். சுஜித் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பயன்படாத் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டன. முறையான சட்டவிதிகளை பின்பற்றி ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும் என சட்டம் வகுக்கப்பட்டது.

கல்வி தொலைக்காட்சி தொடக்கம்:

இந்தியாவில் முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கென தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை:

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் பின்பக்க சுவற்றை துளையிட்டு மூகமூடி அணிந்த இரு நபர்கள் ரூ.12 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்க, வைர நகைகள் திருடிச் சென்றனர். தமிழகம் முழுவதும் விவாதப் பொருளான இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அதற்கு அடுத்த சில நாள்களில் போலீஸார் கைது செய்து நகைகள் மீட்கப்பட்டன

சீன அதிபர் தமிழகம் வருகை, மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு:

சீன அதிபர் ஷீ ஜின்பிங் – பிரதமர் மோடி இடையேயான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பல்லவர் கால சிற்பக் கலைகளை பறைசாற்றும் வகையில் அங்கு அமைந்துள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் பகுதிகளை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மோடியும், ஷீ ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும், சீன அதிபரை வரவேற்றதும் தேசிய அளவில் பேசுபொருளானது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் காரணமாக கடற்கரை நகரமான மகாபலிபுரம், நாட்டைக் கடந்து கவனம் பெற்றது. சீன அதிபரை தமிழக மக்கள் வழிநெடுகிலும் வரவேற்று உற்சாகப்படுத்தினர். நம்முடைய பாரம்பரிய கலைகளையும், உணவு வகைகளையும் கண்டு சீன அதிபர் பாராட்டினார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்:

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதன் மூலம் பேரவையில் அக்கட்சியின் பலம் 125-ஆக அதிகரித்தது. அதேவேளையில் அவ்விரு தொகுதிகளிலும் தோல்வியுற்றதன் காரணமாக திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆகவும் குறைந்தது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் விக்கிரவாண்டியையும், காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் நாங்குநேரியையும் கைப்பற்றி அதிமுக அமோகமாக வெற்றிபெற்றது.

மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடர் கனமழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார்.

உள்ளாட்சித்தேர்தல்:

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக ஊரக பகுதிகளுக்கு மட்டும் நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *