2020 புத்தாண்டு தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, டிசம்பர்-31

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நன்னாளில், நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வுகளை அனைவரும் வளர்ந்தோங்கச் செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திட புத்தாண்டில் உறுதியெற்பொம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், 2020ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *