2019 இந்தியா: முக்கிய நிகழ்வுகளின் ஓர் பார்வை

சென்னை, டிசம்பர்-31

புல்வாமா தாக்குதல்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தின் போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்து 60 மணி நேர போராட்டத்திற்கு பின் அபிநந்தன் பத்திரமாக இந்தியா திரும்பினார். இவரது வீரத்தை பாராட்டும் வகையில்   ”வீர் சக்ரா” விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

2-வது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி:

நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 303 தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்த பெருமையை பாஜக பெற்றது. இதையடுத்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.

சந்திரயான் 2 பயணங்கள்:

கடந்த ஜூலை 22ஆம் தேதி நிலவிற்கு சந்திரயான் 2-வை இஸ்ரோ அனுப்பியது. இது இந்தியாவின் பாகுபலி என்று அழைக்கப்படும் மிகவும் எடை மிகுந்த ஜி.எஸ்.எல்.வி எம்.கே-3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதையடுத்து ஆர்பிட்டர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை பிரிந்து சென்றன. செப்டம்பர் 6ஆம் தேதி பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டரை நிலவின் தரையில் இறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக லேண்டரில் இருந்து திடீரென தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே ஆர்பிட்டர் மட்டும் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறது. பல நாட்கள் தேடலுக்கு பிறகு இந்திய மென்பொருள் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் விக்ரம் விழுந்து கிடக்கும் இடத்தை நாசா கண்டறிந்து தெரிவித்தது.

சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மோடி அரசு அதிரடியாக நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க ஜம்மு காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் உள்ளிட்டோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். பல நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு:

ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருந்து 1.9 மில்லியன் மக்கள் விடுபட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தம் 33 மில்லியன் பேர் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 31.1 மில்லியன் பேர் மட்டும் குடிமக்களாக தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக அசாமில் போராட்டங்கள் வெடித்தன. பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு அரசு உரிய உதவிகள் செய்யும் என்று அசாம் மாநில அரசு தெரிவித்தது. ஆனால் தொடர் போராட்டங்களால் அசாம் ஸ்தம்பித்தது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு:

நவம்பர் 9ஆம் தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. மேலும் முஸ்லீம் அமைப்பினருக்கு இழப்பீடாக வேறொரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு டிரஸ்ட் ஒன்றை அமைத்து நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் பல ஆண்டுகளாக தீர்வு எட்டப்படாமல் இருந்த அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது.

ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை:

நவம்பர் 28ஆம் தேதி ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்க ரெட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் சம்பவம் நடந்த இடத்திற்கு டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது தப்பி செல்ல முயன்றதாக கூறி நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும் என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா போலீசாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்:

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக (104) அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே சில குழப்பங்கள் நிலவி வந்தன. இதற்கிடையில் பாஜக பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றியது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு நடைபெற்ற 15 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

குடியுரிமை திருத்த சட்டம்:

மக்களவையில் 311, மாநிலங்களவையில் 125 வாக்குகளுடன் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு டிசம்பர் 12ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இந்த சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லீம் அல்லாத நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்டப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்:

2019 நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட ஆந்திர சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 11–ந் தேதி தேர்தல் நடந்தது. ஆந்திராவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பதற்கு 88 இடங்கள் தேவை என்ற நிலையில், 149 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2004–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தரப்பில் ராஜசேகர ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு, அதே சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, தனது தந்தை ராஜசேகர ரெட்டியைப் போன்று மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்களும், தீர்வுகளும்:

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியில் பங்கு கேட்டு ஏற்பட்ட பிரச்சனையால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. யாரும் ஆட்சியமைக்காத காரணத்தினால் அங்கு ஆளுநர் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. சரியாக ஒரு மாதம் கழித்து என்.சி.பி. மூத்த தலைவர் அஜித் பவார் உதவியுடன் பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.  துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றார்.

அடுத்தடுத்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மராட்டியத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவின. அஜித்பவாரின் ஆதரவு கட்சியின் ஆதரவு இல்லை என என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவிக்க, சிவசேனா நீதிமன்றத்தை நாடியது.  உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுக்கு உத்தரவிடப்பட்டது. அஜித்பவார் தன்னுடைய ஆதரவு முடிவிலிருந்து பின்வாங்கியதால், பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு, சிவசேனா, என்.சி.பி., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மீண்டும் அஜித்பவார் துணைமுதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

நித்யானந்தா சர்ச்சையும், கைலாசா நாடும்:

பெங்களூரூவில் ஆன்மீக ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்தன. நித்யானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தினமும் சமூக வலைதளத்தில் தோன்றி நித்யானந்தா ஆன்மீக சொற்பொழிவாற்றி, காவல்துறையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், திடீரென ஒரு நாள் ஈகுவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என்ற தனி நாடு உருவாக்கியுள்ளதாகவும், அந்நாட்டிற்கு தாமே பிரதமர் என்றும், இந்து சமயத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே தம் நாட்டில் குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *