குருவுக்கு மணிமண்டபம் திறப்பு.. முறுக்கிய குடும்பத்தினரை ஒரே மேடையில் அமர வைத்த ராமதாஸ்..
அரியலூர், செப்-17
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்.
பாமக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சரி, அந்த கூட்டங்களில் குருவின் பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. காடுவெட்டி குரு கடந்த மே மாதம் உயிரிழந்தது பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குருவுக்காக மணிமண்டபம் காடுவெட்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திறந்து வைத்தார். அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் காடுவெட்டி குருவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் குடும்பப் பிரச்னையால் மனஸ்தாபத்தில் இருந்த காடுவெட்டி குருவின் தாயார், மனைவி, கனலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரது சகோதரி மீனாட்சி, தாய் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, “பாமக தலைமையை நம்பி இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல. ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. வன்னியர்கள் பாமகவுக்கு இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரபரப்பாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் காடுவெட்டி குருவின் குடும்பத்தை சமாதானப்படுத்தும் விதமாக அவருக்கு மணிமண்டபத்தை கட்டி அவர்களது குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சமாதானப்படுத்தியுள்ளார்.