மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!!!

மும்பை, டிசம்பர்-30

மராட்டிய சட்டசபை விரிவாக்கத்தில் அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று மீண்டும் பதவி ஏற்று கொண்டார்

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த 24-ந் தேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை திடீரென சந்தித்து பேசினார்.

இதன்பின் வருகிற 30ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.  இதில் அஜித் பவார் துணை முதல்வராக மீண்டும் பதவி ஏற்று கொண்டார்.  அவரை தொடர்ந்து 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *