2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது!!!

சென்னை, டிசம்பர்-28

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்காக இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர்கள் மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர்.

இதையடுத்து வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஊர்களில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் வெளியேற ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வருகிற 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

30-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 702 பேரும், உதவி அதிகாரிகள் 13,062 பேரும், இது தவிர 4,02195 அலுவலர்களும் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மொத்தம் 1,83,959 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப் படவுள்ளன. சுமார் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுகளை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆம் தேதி மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 2-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *