பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பளபளக்கும் சாலைகள்: கோவை மாநகராட்சியின் அடுத்த திட்டம்

கோவை, டிசம்பர்-28

உலகமே பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அச்சுறுத்தலாக பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அரசு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம்பிரித்தல், இயற்கை உரம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு கோவை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர வேலைப்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் இந்த புதிய முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, கழிவுகள் நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறிய சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மாற்றப்படுகின்றன. இதனையடுத்து டைஜெஸ்டர் எனப்படும் இயந்திரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் துகள்களுடன் வெப்பநிலையை நிலைப்படுத்த விவசாயத்தில் இருந்து கிடைக்கும் ஒரு திரவமும் சேர்க்கப்படுகிறது. பின்னர் இதனுடன் தார் சேர்க்கப்பட்டு ஒரு கலவையாக இறுதி வடிவம் பெறுகிறது. இதன் மூலம் தான் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

மற்ற சாலைகளின் உறுதித் தன்மை மூன்று ஆண்டுகள் என்றால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் நான்கு ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்படும் சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவி வெப்பமடைதல், மழையின்மை, நீர்வழிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவது போன்றவை தவிர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *