ராஜேந்திர பாலாஜி அரசியல் கோமாளி – கே.எஸ்.அழகிரி ஆவேசம்

ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளி என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை, செப்-17

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களில் சிலர் தான்தோன்றித்தனமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு அரசியல் கோமாளியைப் போல வாய்க்கு வந்தபடி எல்லோரையும் வசை பாடுவதனால் ஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கிற வரை கொத்தடிமைகளாக இருந்த அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் இப்பொழுது அரசியல் கோமாளிகளைப் போல நடந்து வருகிறார்கள். இவர்களுடைய பேச்சு எல்லோரையும் அருவெறுக்கச் செய்கிறது. இதில் குறிப்பாக, ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல்காந்தி ஆகியோரை ஒருமையில் தரக்குறைவாக நாக்கில் நரம்பின்றி பேசியிருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி விரைவில் தண்டனை பெற்று சிறைக்கு செல்ல இருக்கிற ராஜேந்திர பாலாஜி, தியாக திருவிளக்கு அன்னை சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல்காந்தி ஆகிய அப்பழுக்கற்ற தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான அருகதையோ, யோக்கியதையோ இல்லை. தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி வருகிற இவர்கள் பேசுகிற பேச்சால் காங்கிரஸ் தலைவர்களின் புனிதத்தை சிதைத்து விட முடியாது.

ஜெயலலிதா இருக்கிற வரை அவருக்கு கொத்தடிமைகளாக இருந்தார்கள். அவரது மறைவிற்கு பிறகு சசிகலாவின் கொத்தடிமைகளாக இருந்தார்கள். உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய பிறகு அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்றைய முதலமைச்சரின் எடுபிடிகளாக இருந்து கொண்டு ஊழல் செய்வதையே அன்றாட தொழிலாக கொண்டிருக்கிற ராஜேந்திர பாலாஜிக்களை தோலுரித்துக் காட்டுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. விரைவில் இவர்களது முகத்திரை கிழித்தெறியப்பட்டு, இவர்கள் யார் என்பதை தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *