மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் – ஈ.பி.எஸ். சாடல்

சேலம், டிசம்பர்-27

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் சிபாரிசு என ஏதும் இல்லை, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தமிழகம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது

ஆளுமைத் திறனில் தமிழகம் முதலிடம் என்பது நாம் அனைவருக்கும் பெருமை. எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார். ஊரகப் பகுதிக்கும், நகர்ப் பகுதிகளுக்கும் தனித்தனியே தேர்தல் என்பது புதியது அல்ல. சுதந்திரமாக நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். திமுகவினர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் 2003-ல் கொண்டுவரப்பட்டபோது, மத்தியில் பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது.

2010ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தபோதும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. 2010ஆம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களிடம் செல்வாக்கு இல்லாத கட்சிகள் சேர்ந்து கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் ஆடுகிறார் என்பதை சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

6 மாதம் குடியிருந்தாலே தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பெறலாம். இந்தியாவில் வசிக்கும், இந்தியர்கள் யாரும் விடுபடமாட்டார்கள் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய-மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்கின்றன. தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *