ஜன.15-ல் அமலாகிறது: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்!!!

சென்னை, டிசம்பர்-28

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜனவரி 15ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், மாதிரி ரேஷன் அட்டை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது.

முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் 12 மாநிலங்களில் வரும் 2020ம் ஆண்டு ஜன.15ம் தேதியிலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் காா்டைப் பயன்படுத்தி பொருள்களைப் பெறமுடியும்.

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய ரேசன் கார்டுக்கான வடிவமைப்பில் பயனாளர்களின் குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ரேசன் கார்டு எண் 10 இலக்கங்களை கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 15ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே ரேசன் கார்டு திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்திருந்த நிலையில், வருகிற 15ம் தேதி முதலே இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *