நிர்வாகம், சட்டம் ஒழுங்கில் தமிழகம் தான் முதலிடம்-அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்

சென்னை, டிசம்பர்-27

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒருசில பாலியல் குற்றங்களையும் குறைத்து மக்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை எனவும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையை அதிமுக அரசு பெற்றுத்தரும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் சமூக நலக்கூடத்தில் தமிழக சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 184 பயனாளிகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் தாலிக்கு 1 பவுன் தங்கமும், 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு 25 ஆயிரமும், பட்டதாரிகளுக்கு 50 ஆயிரமும் திருமண உதவித்தொகையாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், அனைத்து தரப்பு மக்களும் சமூகத்தில் உயர்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், நிர்வாகத் திறன் மேலாண்மையில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது பெருமைக்குரியது எனவும் 2021 ஆம் ஆண்டிலும் இதே வளர்ச்சியுடன் அ.தி.மு.க ஆட்சி தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க ஆட்சிக்கு கிடைத்த பெருமையை நகைச்சுவையாக்கி விமர்சிக்கும் டி.டி.வி போன்றவர்கள்தான் உண்மையில் கோமாளிகள் எனவும் அவர்கள் விமர்சனத்தைப் பற்றி தங்களுக்கு கவலையில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் அமைதியான முறையில் தற்போது நடைபெற்று வருவதாகவும், திமுக ஆட்சி காலத்தில் தேர்தல் நடைபெற்றிருந்தால் பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாலியல் குற்றங்களில் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை அரசு அளிக்கும் எனவும் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை வாங்கித் தரவேண்டியது அரசின் கடமை எனவும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குடியுரிமை சட்டம் அமல்படுத்த குரல் கொடுத்ததாகவும், பா. சிதம்பரமும் இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசி 10 நிமிடம் செய்தியாளர் சந்திப்பே அளித்ததாகவும் கூறிய அவர் தற்போது அவர்களே திமுக தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்று போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி அ.தி.மு.க எனவும், தி.மு.க அதுபோல் அல்லாமல் பல்வேறு குறுக்கு வழிகளில் முறைகேடுகளை செய்வதால் அவர்கள் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் தவறாகவே தெரியும் எனவும் இதன் காரணமாகவே ஒவ்வொன்றுக்கும் அவர்கள் வழக்கு தொடர்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

மேலும், மற்ற மாநிலங்களில் முதல்வராக பதவி ஏற்பவர்களை வாழ்த்த செல்ல மட்டுமே ஸ்டாலினுக்கு ராசி உள்ளதாகவும், முதல்வராக ராசி இல்லை எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *