கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, செப்-17

கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் டெல்லி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ.8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்புகார் தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிவகுமாரிடம் அமலாக்கத்துறை நான்கு நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி கைது செய்தனர். அடுத்த நாள் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது. இதன்பின்னர் கடந்த 10 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து, இன்று மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல் செய்தது. அதேபோல டி.கே.சிவகுமார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், டி.கே. சிவகுமாரின் கோரிக்கைய நிராகரித்தார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதி, வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனக் கூறினார்.

இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில்நடந்த விசாரணையில் சிவக்குமாரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் அதாவது அக்டோபர் 1-ம் தேதி நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சிவக்குமாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். டாக்டர்கள் முடிவின்படி அங்கு அனுமதிக்கப்பட்டு அவரது உடல் நலம் தேறியதும் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், மனு மீதான விசாரணை தொடர்ந்து நாளை நடைபெறும் என உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *