ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது: ஜனவரி 6ல் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி.டிசம்பர்.27

 திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து சேவையுடன்  தொடங்கியது சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.

மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று கிருஷ்ணர் கூறியதாகவும் அதனால் மார்கழி  மாதத்தின் 30 நாட்களிலும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார், அருளிய திருப்பாவையை சேவித்து  பாவையர் (கன்னிப்பெண்கள்) நோன்பு இருந்து வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சைவர்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடி  சிவபெருமானை வழிபடு செய்துவருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே, வைணவ பக்தர்கள் மட்டுமல்லாமல், இந்துக்கள் அனைவரும் போற்றி வணங்கும் மிகப் புனிதமான மாதமாக மார்கழி மாதம் உள்ளது. வைணவ பக்தர்களின் திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழாவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா அனைத்து வைணவ ஆலயங்களில், ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் அனைத்து வைணவ திருவிழாக்களும் மிக பிரசித்தி பெற்றவை என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவைக் காண உலகெங்கும் இருந்து பக்தர்கள் வந்து அரங்கநாதரை சேவித்து செல்வது வழக்கம்.
இவ்விழாவானது மார்கழி மாதத்தில் 21 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் பத்து நாள்கள் பகல் பத்து எனவும், வைகுண்ட ஏகாதசி திருநாள் முடிந்த பின்பு 10 நாள்கள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுவது மரபு.

 இந்நிலையில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று பகல் பத்து விழா தொடங்கியது.  

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி விழாவில், நாலாயிர திவ்ய பிரபந்த மானது பகல்பத்து மற்றும் ராப்பத்து ஆகிய இருபது நாட்களும் சேவிக்கப்படும். அதன்படி அரங்கநாதர் கருவறையில் தொடங்கி நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சேவிக்கும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நேற்று (26ம் தேதி) இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பகல்பத்து உற்சவம் இன்று தொடங்கியது திருமங்கை மன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை ஒரு கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். அதனை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

இவ்வாறு நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் (கி.பி.823-918) திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும் மற்றைய ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக “பகல்பத்து உற்சவம் “ எனப் பெயரிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தனை வரலாற்று சிறப்புமிக்க பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்துஜனவரி 5ஆம் நாள் நம்பெருமாளாகிய அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட  அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *