அதிமுகவுக்கு செயற்கை நற்சான்று கொடுத்துள்ளது பா.ஜ.க. அரசு-ஸ்டாலின்

சென்னை, டிசம்பர்-27

மோசமான அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது என்றால் பா.ஜ.கவுக்கும்-அதிமுகவுக்கும் மத்திய – மாநில உறவு, கூட்டணி என்பவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட நெருக்கம் குறித்து சந்தேகம் ஏழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை, பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை, பெண்களுக்குத் தேவையான  பாதுகாப்பு இல்லை ஊழல் கோட்டையில் உற்சாகமாக  வாழும் அமைச்சர்கள் என்று, தமிழக மக்கள் அ.தி.மு.க.வின் பொல்லாத ஆட்சி வீசும் வெப்பத்தில் பொசுங்கி வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம்” என்று மத்திய பா.ஜ.க. அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டிருப்பது,  “கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம், யாருக்கும் தெரியாத ஒரு “மர்ம ஆய்வறிக்கை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் உண்மை என்ன? “மூன்றாண்டு கால எடப்பாடி பழனிச்சாமியின் கேடுகெட்ட, மக்கள் விரோத, ஊழல் அரசுக்கு, “நல்லாட்சி சாயம் பூசி” கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பா.ஜ.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே, “முதலிடத்தில் இருப்பதாக” உள்ள தர வரிசைப் பட்டியலில், எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை. ஆனால், அ.தி.மு.க. அரசுக்கு அளித்துள்ள இந்தச் சான்றிதழால், மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் கேடு கெட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது.

“நீதி நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில்” முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. “பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொத்துக் கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை, பெண்களின் பாதுகாப்பு” மட்டுமல்ல, “பெண் குழந்தைகள் பாலின வன்கொடுமையில் தமிழகம் இந்தியாவில் 2-ஆவது இடம்” என்று அடுக்கடுக்கான சட்டம்- ஒழுங்குச் சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அ.தி.மு.க. நல்லாட்சி வழங்கியுள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது?

”பொதுப் பாதுகாப்பு” ஆய்வு வரம்பிற்குள் குற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த எந்த “அளவுகோலும்” இல்லை. பிறகு எப்படி இந்த முடிவு அறிவிக்கப்பட்டது? அடுத்து, “பொது உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வரம்பிற்குள் சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்றவை முக்கியமாக வருகின்றன. “தமிழகம்தான் உள்ளாட்சித் தேர்தலே மூன்று வருடங்கள் நடத்தாத ஒரே மாநிலம்” என்று மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் மாநிலத்திற்கு வர வேண்டிய உள்ளாட்சி நிதியை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளது.

“சாலை, குடிநீர், கழிப்பிட” வசதிகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது, எப்படி இந்தத் துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது? மேற்கண்ட இரு துறைகள் தவிர, மீதமுள்ள 7 துறைகளில் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு மிக முக்கியமாக கருதப்படும், “வணிகம் மற்றும் தொழிற்சாலைகள்” பிரிவில் 14 ஆவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் முடிந்து விட்டது. அதிலும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமும், 5.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிவித்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை முதலீடுகளும் வரவில்லை; தொழிற்சாலைகளும் வரவில்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் இரண்டு மாநாடுகள் நடத்தியும், முதலமைச்சர் தொடங்கி மற்ற அமைச்சர்கள் வரை சாரை சாரையாக வெளிநாடு சென்றும், தொழில்துறையில் தமிழகம் 14- ஆவது இடம் என்பது, இந்த ஆட்சிக்கு வெட்கமாக இல்லையா?

“முதலிடம்” என்று தலைப்புச் செய்தி போடும் நாளேடுகளுக்கு, “தமிழகம் தொழில்துறையில் 14-ஆவது இடம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் “விவசாயத்துறையில்” தமிழ்நாடு 9-ஆவது இடம், ஏழை எளியவர்களின் நலனுக்கான “சமூக நலத்துறை”யில் தமிழகம் 7-ஆவது இடம், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையைப் பெருக்கி, தொடர்ந்து நிதி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகம் தத்தளிப்பதால், “பொருளாதார மேலாண்மையில்” 5- ஆவது இடம் என்றெல்லாம் உண்மையான செய்திகளைப் போட ஏன் துணிச்சல் இல்லை? பத்திரிகைகளுக்கு என்ன அச்சுறுத்தல்? எங்கிருந்து அழுத்தம்?

பாரபட்சமற்ற ஆய்வு ஒன்று, அரசியல் சாராத நடுநிலை அமைப்பினால், நிபுணர்களைக் கொண்டு, இன்றைக்கு நடத்தப்பட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் “கமிஷன், கரெப்ஷன், கலெக்சனில்” முதலிடம் பிடிக்கும். சட்டம் ஒழுங்குச் சீரழிவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும். வேலை இல்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்திற்கு வரும். “நல்லாட்சியில்” பூஜ்யத்திற்கும் கீழே ஏதாவது ஒரு “வரையறை செய்ய முடியுமென்றால், அந்த இடத்திற்குச் சென்று விடும். இதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான நிலைமை.

 “ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை” “அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை” பலரும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் ஊழல் வழக்கு விசாரணைகளிலும், சி.பி.ஐ. விசாரணையிலும் சிக்கிக்  கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் முதலமைச்சரின் ஊழல் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ரெய்டுகள் அமைச்சர்கள் மீதும்- ஏன் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அலுவலகத்திலும் நடந்து விட்டது.

ஆனாலும் “நல்லாட்சி” என்று, தரம் கெட்ட ஆட்சிக்கு ஒரு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு, அதில் “முதலிடம்” என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் ஆட்சிக்கு தர நிர்ணயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் எப்படி முடிந்தது?  வேறு எந்த ஒரு மத்திய அரசும் இப்படியொரு தர நிர்ணயப் பரிசோதனையில் அ.தி.மு.க. ஆட்சியை ஈடுபடுத்தி, மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கெடுத்து தரம் தாழ்த்திக் கொள்ள முன்வந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

மோசமான அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது என்றால், பா.ஜ.க. அரசுக்கும்- இங்குள்ள அ.தி.மு.க. அரசுக்கும் “மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான” உறவு என்பதையும் தாண்டி- ஏன், “கூட்டணி உறவுக்கும்” அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, “அதிமுக- பா.ஜ.க.” உறவு அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தங்களுக்குப் பயன்படாத தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில், “அதிமுக அரசுக்கு நல்லாட்சி” சான்றிதழை மத்திய பா.ஜ.க. அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. இதைத் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்! தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *