கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து

நூர் சுல்தான், டிசம்பர்-27

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இருந்து இன்று காலை 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

இதுகுறித்து கஜகஸ்தான் தொழில்துறை மற்றும் கட்டமைப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இருந்து தலைநகர் நூர்சுல்தான் நகருக்கு இன்று காலை 7.22 மணிக்கு பெக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 95 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் அல்மாட்டி நகரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அல்மாட்டி நகரின் புறகநரில் இருக்கும் 2 அடுக்குமாடிக்கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் பெரும்பகுதி பாகங்கள் நொறுங்கின. ஆனால், நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்கவில்லை.

இந்த விபத்து குறித்து மீட்புப்படையினர், தீத்தடுப்பு படையினர், போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டத் தகவலில் விமான விபத்தில் 9 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விமானம் கட்டிடத்தில் மோதி விழுந்த பகுதி மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தையடுத்து அல்மாட்டி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பெக் ஏர் விமான நிறுவனமும் தனது சேவையை இன்று ரத்து செய்துள்ளது. இந்த விமான விபத்து எவ்வாறு நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யச் சிறப்புக் குழுவை கஜகஸ்தான் அரசு அமைத்துள்ளது. கஜகஸ்தான் அதிபர் குவாசிம் ஜோமர்ட் தொக்கேவ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *