தெலுங்கானாவின் கிரண்பேடியாக மாறும் தமிழிசை!
தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத், செப்-17
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார்.
அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.
அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில் விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக, தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர் இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா? விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம். அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று கூறினார்.
தமிழிசை பதவி ஏற்ற ஒரு வாரத்தில் அதிகார சர்ச்சை தெலுங்கானாவில் உருவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.