நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு, நீதி, உள்கட்டமைப்பு, பொது பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்!!!!

டெல்லி, டிசம்பர்-26

நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எவை என்று மத்திய அரசின் நிர்வாகத் சீர்திருத்தத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் எந்தெந்த மாநிலங்கள் நிர்வாகத் திறமையில் முதன்மை இடங்களில் உள்ளன என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. தேசிய நல்லாட்சி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து அந்தப் பட்டியலை மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது.

நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பிலும் தமிழகத்திற்கு இந்திய அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. சட்டம் -ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழகத்திற்கு 7வது இடமும், வேளாண் மற்றும் அதன சார்ந்த துறையில் 9வது இடமும், சுற்றுசூழல் பிரிவில் 3வது இடமும், மனித வள மேம்பாட்டில் 5வது இடமும், வணிகத்தில் 14வது இடமும் பிடித்துள்ளது. பொது சுகாதாரத் துறையில் கேரளாவிற்கு அடுத்தப்படியாக தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 18 பெரிய மாநிலங்களின் பட்டியலில் பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்திற்கு 5ம் இடம் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிரா (5.40) இரண்டாவது இடத்திலும் கர்நாடகா (5.10) மூன்றாவது இடத்திலும் சத்தீஸ்கர் (5.05) நான்காவது இடத்திலும், ஆந்திரா (5.05) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

குஜராத், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீகார், கோவா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. உத்தரபிரதேசம் ஜார்கண்ட் மாநிலங்கள் கடைசியாக 17-வது 18-வது இடத்தில் உள்ளன.

யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சண்டிகர், டெல்லி அடுத்த இடங்களில் உள்ளன. லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது.

வடகிழக்கு மற்றும் மலை பகுதிகள் கொண்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரகாண்ட், திரிபுரா, மிசோராம், சிக்கிம் மாநிலங்கள் அடுத்த இடத்தில் உள்ளன. காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் நிர்வாகம் மோசமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை வளர்ச்சியில் மத்திய பிரதேசம் சிறப்பான நிலைக்கு வந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவு தானிய பொருள் உற்பத்தி, பால் உற்பத்தி, தோட்டக்கலை உற்பத்தி ஆகியவற்றிலும் மத்திய பிரதேசம் சிறந்து விளங்குவதாக தெரிய வந்துள்ளது. மிசோரம், டாமன் டையு ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. வர்த்தகம் தொழிலில் ஜார்கண்ட், உத்ரகாண்ட், டெல்லி முதன்மை இடங்களை பிடித்துள்ளன.

மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், சமூக நலம், நீதி, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலும் மாநில வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய மந்திரி ஜீதேந்திர சிங் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தகவல்களை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *