திமுகவுக்கு 30 ஆண்டுகள் கிரகணம் பிடித்துள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, டிசம்பர்-26

சுனாமியில் உயிரிழந்தவர்களின் 15-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளுக்கு தாமே உரிமையாளர் என சசிகலா கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், நீதிமன்றம்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 30 ஆண்டுகள் திமுகவுக்கு கிரகணம் பிடித்துள்ளது என சூரிய கிரகணத்தோடு திமுகவை அமைச்சர் ஒப்பிட்டு பேசினார்.

தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் என்று வந்தாலே திமுக மற்றும் அதன் தலைவருக்கு தானாகவே காய்ச்சல் வந்துவிடும் என கிண்டலடித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதே அதிமுகவின் நோக்கம். மததிய அரசிடமிருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அதிமுக அரசு தான். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி பெறுவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது தி.மு.க. தான். என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *