தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!!

டெல்லி, டிசம்பர்-24

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட உள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு 8வது கணக்கெடுப்பாகும்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

சுதந்திர இந்தியாவின் 1951 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நாட்டில் வசிக்கும் மக்கள் குறித்த முழுமையான அளவை தெரிந்துகொள்ள முடியும். நாட்டில் எந்தப் பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடந்தன. அதன்பின் 2015-ம் ஆண்டு இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

இப்போது சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும், விவரங்களும் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் அசாம் மாநிலம் தவிர்த்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இந்தத் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவல் களஞ்சியத்தின் நோக்கம் நாட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து முழுமையான தகவல் திரட்டுவதற்காகத்தான்


தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு ஒப்புதல்

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான செலவு தொகை ரூ.8,500 கோடிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனினும் NPR மற்றும் NRC இரண்டுமே வேண்டாம் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இரண்டும் பெயரளவில் தான் வேறுவேறு, ஆனால் ஒரே நோக்கத்தில் தான் இதுகொண்டுவரப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தப் போவதில்லை என மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் மாநிலங்கள் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *