திமுக பேரணி: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8,000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, டிசம்பர்-24

சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நேற்று திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ம.தி.மு.க. தலைவர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், முஸ்லிம் லீக், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தடையை மீறி இந்த பேரணி நடத்தப்பட்டதாக மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மீறியது போன்றவற்றுக்காக சட்டப்பிரிவு 143, 188, 341 ஆகியவற்றின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *