இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிறுவனத்துக்கு பணி ஆணை: அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்

சென்னை, டிசம்பர்-24

இந்தியாவில் முதல்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையில் வீடுகள் தோறும் திடக்கழிவுகளை சேகரித்து, பதனிடுதல் மற்றும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் பணி ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

சென்னை அம்மா மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் உர்பேசர் மற்றும் சுமித் பெசிலிட்டிஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில், சுமார் 9 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இரண்டு திட்டக் கூறுகளாக, வருடத்திற்கு ரூ.447 கோடி மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையில், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பேசர் நிறுவனம் மற்றும் நமது நாட்டின் சுமீட் பெசிலிடீஸ் லிம்டெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு 8 ஆண்டு காலத்திற்கு அனுமதி அளித்து இன்று பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை மூலம் சுகாதார மற்றும் சுத்தமான சூழ்நிலையை ஏற்படுத்துதல், நலவாழ்வு பணிகளில் சமுதாயத்தை ஈடுபடுத்துதல் போன்ற முக்கியமான பொது சுகாதார பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு தலையாய பணிகளாக மேற்கொண்டு வருகிறது.

நமது மாநிலத்தை, மேலும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு, பல முன்னோடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது, அவற்றில் முக்கியமான ஒன்று, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை திறம்பட கையாளுதலும் ஒன்றாகும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குப்பைகளை தரம் பிரித்து அளிக்கவும், குப்பைகளை மறு உபயோகம் செய்தல் மற்றும் மறுசுழற்சிக்குட்படுத்தி குப்பை உருவாகும் அளவினை குறைக்கவும் குடியிருப்பு நலச்சங்கங்கள், பல்வேறு அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 85.18 லட்சமாகும். இவை தவிர, நாள்தோறும் வந்து செல்வோர் எண்ணிக்கை சுமார் 8 இலட்சங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தினசரி 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிகளுக்காக தினசரி 19,300 துப்புரவு பணியாளர்கள், 5400 மூன்று சக்கர மிதிவண்டிகள், 12,000 உலோக குப்பைத் தொட்டிகள், 411 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள், 134 கனரக காம்பாக்டர்கள், 155 இலகுரக காம்பாக்டர்கள், 144 கனரக/இலகுரக டிப்பர் லாரிகள், 22 முன்பளுதூக்கி இயந்திரங்கள், 15 இயந்திரப் பெருக்கிகள் மற்றும் 10 கடற்கரை மணல்பரப்பினை சுத்தம் செய்யும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி மக்கும் குப்பையை அந்தந்தபகுதிகளிலேயே சிறிய அளவிலான பதனிடுதலுக்குட்படுத்தி குப்பையிலிருந்து இயற்கை உரம், உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது 141 சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் கூடங்களும், 40 எண்ணிக்கையில் உயிரி எரிவாயு நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன.

நாள்தோறும் சுமார் 425 டன் மக்கும் குப்பை இங்கு கையாளப்படுகிறது. உலர் குப்பைகளை மறுசுழற்சி செய்து, பயன்பாட்டிற்கு உட்படுத்த 184 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 200 டன் குப்பை கையாளப்பட்டு வருகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பயன்பாட்டு குப்பைகள் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்ட்ட மறுசுழற்சியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 100 டன் தோட்டக் கழிவுகள் மற்றும் காய்ந்த இளநீர்/தேங்காய் மட்டைகள் துகள்களாக்கப்பட்டு மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது.மேலும், அதிகளவில் குப்பை உருவாக்குபவர்கள் மக்கும் குப்பை கழிவுகளை, அவர்களேதம்முடைய இடத்திலேயே பதனிடவும் அவ்வாறு செய்ய இயலாதவர்களிடமிருந்து பெறப்படும் ஈரக்கழிவுகளை உயிரி எரிவாயு தயாரித்தலுக்காக நாள்தோறும் 50 டன் கொள்ளளவு கொண்ட மையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர நாள்தோறும் தலா 100 டன் கொள்ளளவில் மூன்று உயிரி எரிவாயு நிலையங்கள் அமைக்கும் பணியும் விரைவில் பணிதுவங்கப்படவுள்ளது. மறுசுழற்சிக்குட்படாத மக்காத குப்பை எரியூட்டப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் எஞ்சிய சாம்பலிலிருந்து கட்டட உப பொருட்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு,இதற்காக நாள்தோறும் 10 டன் கொள்ளளவில் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மேலும் இதே போல் நாள்தோறும் 50 டன் கொள்ளளவில் நிலையம் அமைக்கும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதுபோன்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதற்குரிய பதனிடுதலுக்குட்படுத்தப்படுவதால் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பை அளவு வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, இம்மண்டலங்களில் உள்ள தெருக்களை பெருக்குதல், வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து, அவற்றை அதற்குறிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையில், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பேசர் மற்றும் இந்தியநாட்டைச் சார்ந்த சுமீட் பெசிலிடீஸ் லிம்டெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு 8 ஆண்டு காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், குப்பை அளவீட்டு முறையில் கணக்கிடப்பட்டு பணப்பட்டுவாடாசெய்வதற்குப் பதிலாக இந்தியாவிலேயே முதன் முறையாக திடக்கழிவு மேலாண்மை இந்தியாவிலேயே முதன் முறையாக திடக்கழிவு மேலாண்மைத் துறை பணிகளில் செயல்திறன் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்தல் பணிகளில் செயல்திறன் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்தல் பணப்பட்டுவாடா செய்தல் (cost of service Delivery Model) என்ற முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 மண்டலங்களில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளிலிருந்து பெறப்படும் 100 சதவீதம் குப்பைகளும் முறைப்படி தரம் பிரிக்கப்படும். இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக, மின்கல வாகனங்கள் (battery operated Vehicle) பயன்படுத்தப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்திற்கு கொண்டு சேர்த்தல், பொது மக்களிடம் பெறப்படும் புகார்களை 12 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் போன்ற 34 எண்ணிக்கை செயல்திறன் குறியீடுகள் வாயிலாக, பணிகளை கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்படும்.

மூன்றாம் நிலை ஆலோசர்கள் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரரின் செயல் திறன் கண்காணிக்கப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடு நிலையங்களான நுண் உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்டக் கழிவு மற்றும் தேங்காய் மட்டை மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையம் ஆகியமையங்களுக்கு சேர்க்கப்படும்.மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் குப்பை தொட்டிகளில் குப்பை அகற்றுதல் மற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறைந்த அளவிலான திடக்கழிவுகள் குப்பை கொட்டும்வளாகத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். சாலைகள் / மக்கள் பெருமளவில் கூடும் இடங்கள் / வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி குப்பைகள் இல்லாத வகையில் பராமரித்தல். மேற்கூறிய இப்பணிகள், அவ்வப்போது சீராய்வு செய்யப்பட்டு குப்பை தேக்கமின்றி அகற்றவும், தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், துணை ஆணையாளர் பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுசுதன் ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஆகாஷ், மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர்கள், முதன்மை தலைமைப் பொறியாளர் புகழேந்தி, தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன், உர்பேசர் மற்றும் சுமித் பெசிலிட்டிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

One thought on “இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ஸ்பெயின் நிறுவனத்துக்கு பணி ஆணை: அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்

  • April 2, 2020 at 7:09 pm
    Permalink

    Hello
    This is an interesting project. Can we have an English version of the same,

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *