காவிரி போராட்டம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன்

சென்னை, டிசம்பர்-24

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேருக்கு நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.   

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, காதர்மொய்தீன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு 26 ஆம் தேதி நேரில் ஆஜராகக்கோரி சம்மன் அனுப்ப நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *