மனசாட்சிப்படி நடந்துக்கோங்க.. டிடிவி தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்
தினகரன் மனசாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும் என அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை, செப்-17
கோவை காந்தி புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு
புகழேந்தி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
என்னை அ.ம.மு.க. வில் இருந்து நீக்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவிக்கவில்லை. கட்சி வெளியிட்ட அறிவிப்பில் எனது பெயர் இடம்பெறவில்லை. நேற்று என்னுடைய பெயர் விடுபட்டு இருந்தது. என்னை நீக்கி விட்டேன் என்று தினகரன் சொல்லவில்லை. பொதுச்செயலாளர் என்னை நீக்கியதாக சொல்லவில்லை. நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம் பாதி அழிந்து விட்டது. மாற்று நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். 42 தொகுதியை ஒரே நிர்வாகி கவனித்தால் கட்சியை எப்படி நடத்த முடியும். நான் எந்த கட்சிக்கும் போவதாக இல்லை. அதுபோன்ற முடிவை நான் எடுக்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் வெளியிட உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளிவரும். நான் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். தேசத்துரோக வழக்கு, வருமான வரி சோதனை போன்றவற்றை சந்தித்து வருகிறேன்.
தினகரன் மனசாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும். அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு செல்பவர்கள் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமல் அரசியல் நம்பிக்கையற்றவர்களாக மாறி விடுகிறார்கள். சசிகலாவை சிறையில் சந்தித்து நிறைய பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.