அதிகளவில் குப்பைகளை கொட்டினால் அப்புறப்படுத்த கட்டணம் செலுத்தவேண்டும்-கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர்-23

ஒரே நாளில் 20 டன்னுக்கு மேல் குப்பைகளை கொட்டினால் அதனை அப்புறப்படுத்த முறையாக கட்டணம் செலுத்தவேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம்பிரித்தல், இயற்கை உரம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு கோவை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரே நாளில் 20 டன்னுக்கு மேல் குப்பை போடுபவர்கள், அதனை முறையாக அப்புறப்படுத்த தகுந்த கட்டணம் செலுத்தவேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பொதுவாகவே அதிகமாக குப்பைகள் சேரும். அந்த குப்பைகளை அப்புறப்படுத்த கட்டணம் செலுத்தவேண்டும் என கோவை மாநகராட்சி கூறியுள்ளது.

கழிவு மற்றும் குப்பைகளை அதிகளவில் தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ கொட்டக்கூடாது எனவும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *