NRC விவகாரம்: மோடி, அமித்ஷா முன்னுக்குப் பின் முரண்-சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, டிசம்பர்-23

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. இந்த நேரத்தில் இது மிக முக்கியமானது. ஜார்க்கண்ட் மாநிலத்தை மட்டும் தனியாக பார்க்க முடியாது. கடந்த 3 மாதங்களில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளை சேர்த்தே பார்க்கவேண்டும்.

இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தனிப் பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்தது. மோடி, அமித்ஷாவின் திமிரை அடக்கிவிட்டது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள். மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பணபலம் மற்றும் அதிகார பலம் ஆகியவையும் பாஜக கட்சிக்கு இருக்கிறது. அத்தனை பலம் இருந்தும் ஹரியானாவில் 31 இடங்கள் தான் கிடைத்தது. 50 கிடைக்கும் என்று சொல்லி வந்தனர். ஆனால் நடக்கவில்லை.

மகாராஷ்டிராவில் தனியாகவே 150 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் வலிமை கிடைக்கும் என்று சொன்னார்கள். மகாராஷ்டிராவில் 105 இடங்கள்தான் கிடைத்தது. ஹரியானாவில், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆட்சி அமைத்துள்ளனர். அது நிலையான ஆட்சி இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆட்சி அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க பாஜக முயன்றபோது தோற்கடிக்கப்பட்டது. ஜார்க்கண்டில் இப்போது முழுமையான தோல்வியை பாஜக கண்டுள்ளது. பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி கிடையாது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு நாட்டுக்கு வந்தால், அநீதிகளை உணர்ந்து ஏறத்தாழ ஒரே அணியில் நின்றால், ஒவ்வொரு தேர்தலிலும், பாஜகவை தோற்கடிக்க முடியும், என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் இன்று 12 கட்சிகள் சேர்ந்து மகத்தான பேரணி நடத்திக்காட்டப்பட்டது. இதற்கு ஆதரவு தந்த அனைத்து கட்சிகளுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. தேசத்துக்கு வந்திருப்பது சாதாரண சவால் அல்ல. வழக்கமான பிரச்சனையாக கருதக் கூடாது. இந்தியா என்ற அடிப்படைக்கே சவால் விடுவதாக உள்ளது மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்.

நேற்று ( 22.12.2019) பேசிய பிரதமர் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து சிந்திக்கவே இல்லை என்கிறார். பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறியதை யாரும் மறுக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லா மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்துவோம் என்றார். பரிச்சார்தமாக அசாமில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தோல்வியடைந்தது.

1600 கோடி ரூபாய் செலவில் அஜேலா என்ற அதிகாரியை நியமித்து உச்சநீதிமன்றத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவை அம்மாநில மக்களே நிராகரித்து விட்டனர். ஆய்வு குப்பைத் தொட்டியில் தூக்கிப்போடப்பட்டது. ஊழலில் சிக்கிய அஜேலா வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் பிரதமர் இதை மறுத்துப் பேசுகிறார். உண்மைக்கு புறம்பாக பிரதமர் பேசுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமைச்சட்டம் அண்டை நாடுகளில் உள்ள இந்து, ஜெயின், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி, பௌத்த மதத்தினர் உள்ளிட்ட 6 பிரிவு மக்களை அனுமதிக்கிறது.

ஆனால் இலங்கைத் தமிழர்கள் மியான்மரில் உள்ள ஒருபிரிவு இசுலாமிய மக்கள் பாகிஸ்தான் அசுமதியா பிரிவு இசுலாமிய மக்களை மட்டும் அனுமதிக்க மறுப்பது ஏன், குறிப்பாக இலங்கையில் உள்ள இந்து தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது ஏன். குடியுரிமை திருத்த சட்டம் இசுலாமிய மக்களுக்கு எதிரானது, இது செல்லாது என்று ப.சிதம்பரம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *