மழைநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய 100 அதிநவீன ரோபோ இயந்திரம்: சென்னை மாநகராட்சி

சென்னை, டிசம்பர்-23

சென்னையில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிக்காக ரூ.10 கோடி செலவில் 100 ரோபோ இயந்திரங்கள் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் 1,894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் தூர்வாரும் பணியை செய்யும்போது 3 லட்சம் டன்னுக்கு மேற்பட்ட வண்டல் மண் தூர்வாரப்படும். வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணியின் போது 4 லட்சம் டன் வண்டல் மண் தூர்வாரப்பட்டது.

இந்த தூர்வாரும் பணியில் பெரும்பாலும் மனிதர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றவும், தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவும் நவீன இயந்திரங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் இதற்கான ரோபோ இயந்திரத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் சோதனை செய்து பார்த்தனர்.

இந்நிலையில், இந்த ரோபோ இயந்திரத்தை வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மழைநீர் வடிகால் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறுகையில், ‘‘மாநில பேரிடர் மீட்பு நிதியின் மூலம் 10 கோடி செலவில் 100 ரோபோ இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய நுழைவு கொண்ட மழைநீர் வடிகால்களில் மனிதர்கள் இறங்காமல் இயந்திரத்தால் சுத்தம் செய்ய முடியும்.

இந்த ரோபோ இயந்திரம் 17 நிமிடங்களில் சாக்கடையை தூய்மை செய்துவிடும். ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தால், எட்டு மணி நேரம் வரை இதை எந்த சிரமமும் இல்லாமல் பயன்படுத்த முடியும். இந்த ரோபோ இயந்திரம் தற்போது கோவை, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் பயன்படுத்தபடுகிறது. விரைவில், சென்னையில் பயன்பாட்டுக்கு வரும்,’’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *