பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும்-ரகுபர் தாஸ் நம்பிக்கை!!!

ராஞ்சி, டிசம்பர்-23

ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சியமையும் என அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ரகுபர் தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மொத்தம் 65.17 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாஜக தனித்தும், ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா தலைமையில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் களம் கண்டன. மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 41 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 50 இடங்கள் கிடைக்கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், நேரம் செல்லச்செல்ல காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. காங்கிரஸ் கூட்டணி 45 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜார்க்கண்ட் முதல்வரும், பாஜக முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ், “இந்த முன்னிலை நிலவரங்கள் இறுதியானது அல்ல. இன்னும் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. இதனை வைத்துக் கொண்டு வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனால், ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், பாஜக தலைமையில் ஜார்க்கண்ட்டில் ஆட்சியமையும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *