இது பேரணி அல்ல, போரணி – மு.க.ஸ்டாலின்!!!

சென்னை, டிசம்பர்-23

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தி.க. தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.

பேரணி முடிவில் மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்: “மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம். தோழமை கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பேரணி சிறப்பாக நடந்துள்ளது.

இது பேரணி அல்ல. போரணி. இதில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் நன்றி. பேரணிக்கு தடை விதிக்க முயற்சி செய்து நமக்கு விளம்பரம் தேடித் தந்த அதிமுகவுக்கும் நன்றி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையும் நம்மோடு கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் அவர்களுக்கும் நன்றி. அண்ணா காட்டிய வழியில், காமராஜர் வழியில், கலைஞர் வழியில் நாம் இந்த பேரணியை அமைதி வழியில் நடத்தினோம். அதேபோல் அமைதியாக அனைவரும் கலைந்து செல்வோம்” என்று ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *