உண்மை தெரிந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கமாட்டாங்க- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், டிசம்பர்-21

இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளாட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் ஆட்சி தான் தொடரும். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். பொதுமக்களின் அபிமானத்தை பெற்றவர்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியின் சூழ்ச்சியினால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒருநாள் உண்மை கண்டிப்பாக வெளிவரும் அப்போது மக்கள் இந்த சட்டம் குறித்து நன்றாக புரிந்து கொள்வார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது இனவாதத்தையும் பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையும் பரப்பி வருகிறார். குறிப்பாக இந்த சட்டத்தை முஸ்லிம் மதத்தில் உள்ள ஜமாத்தில் உள்ள பெரிய தலைவர்கள் ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் திமுக அதை பெரிது படுத்துவது வேடிக்கையானது.

அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்தியாவில் தஞ்சம் அடைந்து குடியுரிமை கேட்டு வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் நக்சலைட்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் மம்தாபானர்ஜி ஆதரிக்கிறார். உள்நாட்டுக் கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்றுதான் ஸ்டாலின், சோனியாகாந்தி திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற தகவல் எனக்கு வந்துள்ளது.

தீவிரவாதத்தைத் தூண்டும் கட்சிகளை தடை செய்ய வேண்டும். இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *