CAA-க்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது

சென்னை, டிசம்பர்-21

திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வருகிற 23ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள திமுக கூட்டணிக் கட்சிகள், தோழமை அமைப்புகள், நடிகர் சங்கம் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அருணாச்சலம், சவுரிராஜன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா, பங்கேற்காதா என்பது பற்றி அறிக்கை மூலம் அறிவிக்கப்படும் என்றனர்.

இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் வெளிநாடு செல்லவுள்ளதால் அவரால் கலந்து கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் என்னால் திமுக பேரணியில் பங்கேற்க முடியாது என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *