2020-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அட்டவணை அறிவிப்பு

சென்னை, டிசம்பர்-21

வருகிற 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் மாதங்களை ஆண்டுத்திட்ட அறிக்கையாக டி.என்.பி.எஸ்.சி. முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதன்படி வருகிற 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

டி.எஸ்.பி.எஸ்.சி. போன்ற முக்கிய பதவி இடங்கள் அடங்கிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும். இதே மாதத்தில் வேளாண் அலுவலர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

நூலகர் காலிப்பணியிடம் மற்றும் மீன்வளத் துறையில் ஆய்வாளர், கல்லூரி கல்வித்துறையில் நிதி காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதமும், ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதமும் வெளியாகும்.

தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர் சார்பதிவாளர் போன்ற முக்கிய பதவியிடங்கள் குரூப்-2 பிரிவுக்குள் வருகின்றன. இந்த பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்வை எதிர்கொள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பார்கள். இந்த தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படுகிறது.

செயல் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான குரூப்-8ஏ, பி ஆகியவற்றுக்கு ஜூலையிலும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியிடத்துக்கு ஆகஸ்டு மாதத்திலும் தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பதவிகளுக்கான குரூப்-4 தேர்வுகளுக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்வார்கள். இந்த ஆண்டில் 6 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு சுமார் 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

வனத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கான குரூப்-4 தேர்வுகள் அட்டவணை அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. தேர்வுகள் குறித்த தேதிகளுக்கும், இதர விவரங்களுக்கும் செய்தித்தாள்களையும், தேர்வாணைய இணைய தளத்தையும் பார்த்து வர வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *