குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பிரிவு 14 ஐ மீறுகிறதா? என்ன சொல்கிறது சட்டப்பிரிவு 14?

சென்னை, டிசம்பர்-21

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வரும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த சட்டத்திருத்தம் சட்டப்பிரிவின் 14 ஐ மீறுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த சட்டப்பிரிவு 14 என்ன சொல்கிறது? குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பிரிவு 14ஐ மீறுகிறதா? என்பது குறித்து பார்க்கலாம்…

சட்டப்பிரிவு 14-ம் முக்கிய அம்சங்கள்:

 • இந்திய எல்லைக்குள் எந்த நபருக்கும் சமத்துவமோ அல்லது சட்டத்திற்குட்பட்ட சம அளவிலான பாதுகாப்போ மறுக்கப்படக்கூடாது.
 • இந்திய குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு சமமானவர்கள்
 • எந்த ஒரு பிரிவு மக்களையும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் எந்த சட்டம் இயற்றினாலும் அது சட்டவிரோதம் என்று 14 வது பிரிவு சொல்கிறது.
 • மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் யார்? என்பதை நடுநிலையாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் 14வது பிரிவின் நோக்கம். துன்புறுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகப்படியான பிரிவினரை சேர்த்துவிடவும் கூடாது. குறைந்த பிரிவினரை மட்டுமே சேர்த்ததாகவும் இருக்கக்கூடாது

குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பிரிவு 14 ஐ மீறுகிறதா? :

 • இந்திய குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு சமமானவர்கள் என்று சட்டப்பிரிவு 14 சொல்கிறது. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கே கிடைக்காத பல உரிமைகளும் சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு அதிகம் கிடைக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றப்படுகின்றன. அவை எல்லாமே அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று தானே கருத்தில் கொள்ளவேண்டும்.
 • எந்த ஒரு பிரிவினரையும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டக்கூடாது என சட்டப்பிரிவு 14 சொல்கிறது. அப்படி பார்த்தால், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான சட்டங்களும் திட்டங்களும் நீண்டகாலமாக அமலில் இருக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களை பிரித்து பார்க்கிறது என்று கூறுபவர்கள், சட்டப்பிரிவு 14 ஐ ஏன் எதிர்க்கவில்லை என்ற யதார்த்த கேள்வி எழுகிறது.
 • மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் யார்? என்பதை நடுநிலையாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்பது 14வது பிரிவின் நோக்கம். பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர் யார்? அந்த மதத்தவர் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டார்களா? என்பதை அடிப்படையாக கொண்டுதான் குடியுரிமை திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 • ஆகையால், குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பிரிவு 14 ஐ மீறுகிறது என்று சொல்லமுடியாது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் குடியுரிமைப் பிரச்னைக்கு அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக தீர்வு காணவில்லை.
 • குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் 14வது பிரிவுக்கு இடமே இல்லை. அரசியலமைப்பின் பாகம் 3ன் கீழ் 14வது பிரிவு வருகிறது. அரசியலமைப்பின் 2வது பிரிவின் கீழ் வரும் 5 முதல் 11 வரையிலான சட்டப்பிரிவுகள் தான் குடியுரிமையை யாருக்கு வழங்குவது என தீர்மானிக்கின்றன.

சட்டத்தை நிராகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?

 • குடியுரிமை பற்றி அரசியலமைப்பின் 11வது பிரிவு தெளிவாக சொல்கிறது. அதாவது குடியுரிமை வழங்குவது பற்றி எதிர்காலத்தில் செய்யப்படும் சட்டத்திருத்தங்களுக்கு உட்பட்டது என 11வதுபிரிவு கூறுகிறது.
 • அதுதொடர்பாக நாடாளுமன்றம் புதிய சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. மாநில அதிகார வரம்பில் இது வரவில்லை.
 • எனவே, நாடாளுமன்றம் கொண்டு வந்த ஒரு விதியை அல்லது ஒரு சட்டத்தை பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த வழியும் மாநிலங்களுக்கு இல்லை. மாநில அரசுகள் எந்தவிதத்திலும் குறுக்கிட முடியாது.

ஆகையால், குடியுரிமைச் சட்டத்தின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகளை கட்டாயம் படிக்க வேண்டும். அப்போது தான், சட்டப்பிரிவு 14 ஐ குடியுரிமை திருத்த சட்டம் மீறுகிறதா என்பது நமக்கு தெளிவாக புரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *