உன்னாவ் வழக்கு: எம்.எல்.ஏ. குல்திப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!!

டெல்லி, டிசம்பர்-20

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உ.பி. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017-ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.  இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வக்கீல், தாயாருடன் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது காரின்மீது லாரி மோதியதில் அவரது உறவுக்கார பெண் மற்றும் வக்கீல் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொலை செய்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண் உச்சநீதிமன்ற (முன்னாள்) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம், விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, அவரது தந்தையின் மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 1-8-2019 அன்று உத்தரவிட்டது.

மேலும், அந்த பெண்ணுகு உத்தர பிரதேசம் மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் கார் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த 9-8-2019 அன்று டெல்லி டிஸ் ஹசாரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பின்னர், இருதரப்பு வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா கடந்த 16-ம் தேதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை தொடர்பாக 17-ம் தேதி விவாதம் நடந்தது. அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார்.

குல்தீப் சிங் செங்கார் மீது இதற்கு முன்னர் வேறெந்த குற்றவழக்குகளும் இல்லாததாலும் முதன்முறையாக தவறு செய்தவர் என்பதாலும் மிகவும் குறைந்தபட்சமான தண்டனை விதிக்க வேண்டும் என குல்தீப் சிங் செங்காரின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா, தண்டனை விபரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கடந்த 2017-ம் ஆண்டு உ.பி.சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனுவுடன் குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் தண்டனை விபரத்தை வாசித்த மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா, குற்றவாளி குல்தீப் சிங் செங்காரை ஆயுள் வரை சிறையில் அடைக்குமாறும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *