அதிமுக கோரிக்கை எதிரொலி: இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டம்???

சென்னை, டிசம்பர்-20

அதிமுகவின் கோரிக்கையை ஏற்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டமும் வலுத்து வருகிறது. போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகளால் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் பாதிக்கப்படும் என வடகிழக்கு மாநில மக்கள் போராடுகின்றனர்.

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் இஸ்லாமியர்களை குடியுரிமை சட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன்னிறுத்தி அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழகத்தில் இருக்கும் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு குடியுரிமை வழங்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள போராட்டக்களம் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *