இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு-முதலமைச்சர் பழனிசாமி

டெல்லி, டிசம்பர்-19

குடியுரிமை சட்ட போராட்டத்தால், உள்ளாட்சி தேர்தல் பாதிக்காது எனவும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின், 150ம் ஆண்டு நிறைவு விழாவை, அனைத்து மாநிலங்களிலும், சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று (டிச.,19) நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, தலைமையிலான இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை டெல்லி சென்றார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஏதாவது போராட வேண்டும் என இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. எதிர்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தை தூண்டுகின்றன. அவமதிப்பு வழக்கு, நீதிமன்றத்துக்கும் தேர்தல் ஆணையத்திற்குமான பிரச்னை. மாநில அரசுக்கு அல்ல.

இந்த போராட்டங்களால் உள்ளாட்சி தேர்தல் பாதிக்காது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும். தமிழகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தானாக கலைந்து சென்று விட்டார்கள்.

ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் பேராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது. மாநில அரசை பொறுத்தவரை சட்டம் – ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை என கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தமிழக உள்ளாட்சித்துறைக்கு 12 விருதுகள் கிடைத்துள்ளது. இந்த விருதுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டுள்ளார். அவருக்கும், அவரது துறைக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும், இதுபோன்று, அனைத்து துறைகளுமே மத்திய அரசிடமிருந்து விருதுகளை பெறுவதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *